ECONOMYMEDIA STATEMENTPBT

இவ்வாண்டு ஏப்ரல் வரை போதைப் பொருள் குற்றங்களுக்காக 188 அரசு ஊழியர்கள் கைது

கோலாலம்பூர், மே 5- இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 188 அரசு ஊழியர்களை அரச மலேசிய போலீஸ் படை கைது செய்துள்ளது.

அவர்களில் நால்வர் அபாயகர போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 3(1) பிரிவின் 1985ஆம் ஆண்டு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

பல்வேறு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த நான்கு மாத காலத்தில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட 62,132 பேரில் இந்த அரசு ஊழியர்களும் அடங்குவர் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

இந்த சோதனைகளின் போது 21 கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களும் போதை இலைகளும் கைப்பற்றப்பட்டன.

.இச்சோதனை நடவடிக்கைகளில் 7,017 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருள் மற்றும் 1,379 லிட்டர் திரவ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர, 31,856 கிலோ கெத்தும் இலைகள், 21,243 லிட்டர் கெத்தும் பானம் மற்றும் கஞ்சா செடிகளும் இக்காலக்கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 21 கோடியே 30 லட்சம் வெள்ளியாகும்.

இக்கும்பல்களின் உறுப்பினர்களுக்கு சொந்தமான 3 கோடியே 28 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப் பட்டதோடு 27 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இக்காலக்கட்டத்தில் 25,331 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு 22,753 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.


Pengarang :