ECONOMYMEDIA STATEMENT

தீ விபத்தில் மூன்று கடைகள் நாசம்- குவாந்தானில் சம்பவம்

குவாந்தான், மே 5– இங்குள்ள கம்போங் தஞ்சோங் ஆப்பி, ரோரோங் தஞ்சோங் ஆப்பி 13 இல் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் அழிந்தன.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.23 மணிக்கு தாங்கள் தகவலைப் பெற்றதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மாநில தொடர்பு அதிகாரி ஜூல் பட்லி ஜக்காரியா கூறினார்.

குவாந்தான் தீயணைப்பு நிலையத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட தீயணைப்புக் குழுவினர் மூன்று வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் அக்குழுவினர் ஈடுபட்டிருந்த வேளையில் இண்ட்ரா மக்கோத்தா மற்றும் கேபெங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து உதவி கோரப்பட்டது என அவர் தெரிவித்தார்.

அவ்விரு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 28 தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக தீயைக் கட்டுப்படுத்தினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

குவாந்தான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தவிர்த்து இண்ட்ரா மக்கோத்தா மற்றும் கேபேங் நிலையங்களிலிருந்து மேலும் ஐந்து வாகனங்களின் உதவியும் நாடப் பட்டது என்றார் அவர்.

தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவாமலிருப்பதை உறுதி செய்ய தீயணைப்பு வீரர்கள் “ஏரியல் லெடர் பிளாட்பார்ம்“ எனும் வாகனத்தின் சேவையையும் இந்த பணியின் போது பயன்படுத்தினர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :