ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பாகிஸ்தானில் உள்ள மலேசிய வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

கோலாலம்பூர், மே 2- பாகிஸ்தானில் உள்ள மலேசிய வணிகர் ஒருவரின்
வீட்டின் மீது அந்நாட்டின் மாபியா கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதனால் அந்த வணிகர் தனது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானைச் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய பிரஜையான டத்தோ
முகமது தாஹிர் ரஹாட் தனது குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதி
செய்வதற்கு விஸ்மா புத்ராவின் உதவியை நாடியுள்ளார்.

பாகிஸ்தானின் ஹிசாரி நெஹ்ரி மாவட்டத்தில் உள்ள தங்களின் பூர்வீக
நிலத்தைப் பறிப்பதற்கு முயலும் மாபியா கும்பலால் இந்த தாக்குதல்
நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் ஆயுதமேந்திய 200
மாபியா உறுப்பினர்கள் தனது வீட்டின் கண்காணிப்பு கோபுரம் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதனால் தாம் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு
நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காலை 8.30 மணி வரை நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூடு போலீசார் வந்தப்
பின்னர்தான் நிறுத்தப்பட்டது. எனினும், போலீசார் கூட்டத்தைக் கலைக்கும்
வேலையில் ஈடுபட்டார்களே தவிர அந்த மாபியா கும்பலை தடுத்து
நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் முற்படவில்லை என்றார் அவர்.

அந்த கும்பல் எனது நிலத்தை பறித்துக் கொண்டதோடு அந்நிலத்தைச்
சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைத்து கண்காணிப்பு கோபுரத்தையும்
நிர்மாணித்த உள்ளது என அவர் கூறினார்.

அதோடு மட்டுமின்றி தனக்கு யாரும் உதவி செய்து விடக்கூடாது
என்பதற்காக தனது வீட்டிற்கு செல்லும் வழியை காலை 7.00 மணி முதல்
இரவு 7.00 மணி வரை அக்கும்பல் மூடி விடுவதாகவும் அவர் சொன்னார்.
புதுவாழ்வு தேடி பாகிஸ்தானில் இருந்து மலேசியா வந்த அந்த வணிகருக்கு
1980ஆம் ஆண்டில் குடியுரிமை வழங்கப்பட்டது.


Pengarang :