ECONOMYSELANGOR

ஷோம் ஷோப்பிங் உதவி நிதி 200 வெள்ளியாக அதிகரிப்பு- பெருநாள் கொண்டாடும் வசதி குறைந்தவர்களுக்கு பேருதவி

ஷா ஆலம், மே 5- நோன்புப் பெருநாள், சீனப்புத்தாண்டு மற்றும்
தீபாவளியின் போது வசதி குறைந்தவர்களுக்கு 42.00 வெள்ளி மதிப்பிலான
ஹெம்பர் எனப்படும் உணவுப் பொருள் கூடைகளை வழங்குவதை
நோக்கமாக கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட
திட்டம், கால மாற்றத்திற்கேற்ப உருமாற்றம் கண்டு புதிய பரிமாணம்
பெற்றுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளை வசதி
குறைந்தவர்களுக்கு வழங்கும் வகையில் இந்த திட்டம் தரம்
உயர்த்தப்பட்டது. இந்த பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ்
இப்பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில்
அத்தொகைக்கு ஏற்ப தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்
கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த திட்டம் மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங்
முன்னெடுப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்
பற்றுச்சீட்டின் மதிப்பு 200 வெள்ளியாக உயர்த்தப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்தார்.

இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பும் மாதம்
2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது அதோடு
மட்டுமின்றி எஸ்.எம்.யு.இ. எனும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம்
மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் உதவித் திட்ட
பங்கேற்பாளர்களும் இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு
வழங்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்த திட்டத்திற்கு 10 கோடி வெள்ளி
வரை செலவிடப் பட்டுள்ளதோடு சுமார் 830,000 குடும்பங்கள் இதன் மூலம்
பயன் பெற்றுள்ளன.


Pengarang :