சுற்றுச்சூழல், பசுமைத் தொழில்நுட்ப சிறு மானிய விண்ணப்பம் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

ஷா ஆலம், மே 7- சுற்றுச்சூழல் சிறு மானியம் மற்றும் பசுமைத் தொழில்நுட்ப சிறு மானியத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவிருந்த இந்த மானிய விண்ணப்ப காலக்கெடு மேலும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அமைப்புகள் மற்றும் சமூகம் உட்பட 50 தரப்பினரிடமிருந்து இதுவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சுற்றுச் சூழல் சிறு மானியத் திட்டத்திற்கு 500,000 வெள்ளி மற்றும் பசுமைத் தொழில்நுட்ப சிறு மானியத் திட்டத்திற்கு 800,000 லட்சம் வெள்ளி என மொத்தமாக 13 லட்சம் வெள்ளி மட்டுமே இந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன் தொடர்பில் பெரிய அளவில் விளம்பர நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அதிகமாக விளம்பரம் செய்யும் பட்சத்தில் விண்ணப்பங்களும் அதிகமாக கிடைக்கும். மானியத் தொகை குறைவாக உள்ள காரணத்தால் பலர் ஏமாற்றமடையும் நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள செக்சன் யு12 பௌத்த ஆலயத்தில் சிலாங்கூர் மாநில நிலையிலான விசாக தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் சிறு மானிய விண்ணப்பதாரர்களுக்கு 10,000 வெள்ளி மானியமும் பசுமைத் தொழில்நுட்ப சிறு மானிய விண்ணப்பதாரர்களுக்கு 20,000 வெள்ளி மானியமும் வழங்க வகை செய்யும் இத்திட்டம் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.


Pengarang :