ECONOMYSELANGORSUKANKINI

சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்- வீராங்கனையாக ஷாமேந்திரன்-எம். தினா தேர்வு

ஷா ஆலம், ஜூன் 5- சிலாங்கூர் மாநிலத்தின் 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் – வீராங்கனையாக தேசிய கராத்தே-டோ விளையாட்டாளர் ஆர்.ஷாமேந்திரன் மற்றும் மகளிர் பூப்பந்து இரட்டையர்களில் ஒருவரான எம்.தினா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த விருதளிப்பு நிகழ்வில் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்- வீராங்கனையாக அவ்விருவரும் அறிவிக்கப்பட்டனர்.

ஷாமேந்திரன் மற்றும் எம்.தினாவுக்கு தலா 10,000 வெள்ளி ரொக்க வெகுமதி, வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விருதளிப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷாமேந்திரன், தமது பத்தாண்டு கால விளையாட்டுத் துறை வரலாற்றில் இது போன்ற விருதைப் பெறுவது இதுவே முதன் முறை என்று கூறினார்.

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதைப் பெற்ற எம்.தினா அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டிக்கான தயார் நிலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால்  தினாவின் தந்தை எஸ்.முரளிதரன் அவரின் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்டார்.

மாநில நிலையிலான சிறந்த விளையாட்டாளர் விருதை தன் மகள் பெற்றது குறித்து முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்தார். அவரின் சாதனைகள் குறித்து தாம் பெருமை கொள்வதாகக் கூறிய அவர், தினாவின் தியாகங்கள் உரிய பலனைத் தந்துள்ளன என்றார்.


Pengarang :