ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தொகுதி மானியம் அதிகரிக்கப்பட வேண்டும்- பெட்டாலிங் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை

ஷா ஆலம், ஆகஸ்ட் 31 – பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மானியத்தை அதிகரிக்கவும் தொகுதி மக்களின்  நலனை உறுதி செய்வதற்கு ஏதுவாக  தடையற்ற வளர்ச்சியை நிறுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட அதாவது 23 லட்சம் பேர் வசிக்கும் மாவட்டமாகவும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4,783 பேர் கொண்ட மிக அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட பகுதியாகவும் பெட்டாலிங் மாவட்டம் விளங்குவதாக

புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எதிர்மறையான தாக்கத்தைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் படுவது முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிக அடர்த்தியான மக்கள் தொகை  கொண்ட பெரு நகரங்களில் வாழ்வது சராசரி மகிழ்ச்சியின் அளவைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த கருத்தைப் பகிர்ந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இவ்விவகாரம் விரைந்து கவனிக்கப்பட வேண்டும் என்றனர்.

 நியாயமான மற்றும் போதுமான ஒதுக்கீடு இல்லாமல் தன்னைப் போன்ற பெரிய தொகுதிக்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை செய்வது கடினம் என்று   சுபாங் எம்.பி. வோங் சென்  சொன்னார்.

தற்போது, ​​அனைத்து தொகுதிகளுக்கும் அத் தொகுதிகளின் மக்கள் தொகையின் அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே அளவிலான வளர்ச்சி நிதி வழங்கப்படுதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்டாலிங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 480,000 பேர் வசிக்கின்றனர்.நியாயத்தை உறுதிப்படுத்த  தொகுதிகளின் மக்கள் தொகையின் அடிப்படையில்  வளர்ச்சிக்கான மானியம் கணக்கிடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதில் முரண்பாடு என்னவென்றால் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்களைக் காட்டிலும் தனிநபர் வரிகளில் அதிக பங்களிப்பை வழங்குகிறார்கள். இருப்பினும் மக்கள் தொகையின் அளவு காரணமாக சமூக ஆதரவு அவர்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது என்றார் அவர்.


Pengarang :