ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய தினப் பேரணியில் 100,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

புத்ராஜெயா, ஆக 31-  ஒற்றுமை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக புத்ரா ஜெயா, டத்தாரான் மெர்டேக்கா வில் இன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய தினப் பேரணியில் 100,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

 இந்த கோலாகல நிகழ்வைக் காண்பதற்காக சிலர் நேற்றிரவு மக்ரிப் தொழுகைக்கு பிறகு மெர்டேக்கா சதுக்கத்தில் ஒன்றுகூட தொடங்கியதாக தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்த பிரமாண்ட பேரணி யைக் காண சிலர் கெடா, பேராக் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வந்துள்ளனர். இது எங்களின் முதல் தேசிய தின ஏற்பாடு என்பதோடு இதனை வெற்றிகரமாக நடத்த கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாங்கள் கடுமையாகப் பாடுபட்டோம்  என்று இன்று ஊடக மையத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இந்த ஆண்டு தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில், குறிப்பாக நடனங்கள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் விமான நிகழ்ச்சிகளை சீராக வழங்கியதில் தாம் திருப்தி அடைவதாக  2023 ஆம் ஆண்டிற்கான தேசிய தின கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு விழாவை வெற்றிகரமாக நடத்த உழைப்பையும்  யோசனைகளையும் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

தேசிய தினப் பேரணி முடிந்தவுடன்  பேரரசர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் பொது மக்களுடன் அளவளாவிய தனித்துவமான செயல் குறித்து சிலாகித்துப் பேசிய ஃபாஹ்மி, இது பேரரசர் தம்பதியருக்கும் பொதுமக்களுக்கும் மறக்க முடியாத தருணமாக அமையும் என்றார்.


Pengarang :