ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை கிள்ளான் தூய்மைத் திட்டம் தொடர்பில்  அவதூறு – சனுசிக்கு எதிராக அமிருடின் வழக்கு

ஷா ஆலம், செப் 1 –  சுங்கை கிள்ளான் தூய்மைத் திட்டம் குறித்து அவதூறானக் கருத்துகளை வெளியிட்டதற்காக   கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசிக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி வழக்குத் தொடுத்துள்ளார்.

இவ்வழக்கின் வாதி என்ற முறையில் 43 வயதான அமிருடின், ஹைஜான் ஓமார் வழக்கறிஞர் நிறுவனம் மூலம் நேற்று முன்தினம் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில்  இந்த வழக்கைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் அவர் 49 வயதான சனுசியை பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த மாத தொடக்கத்தில் ஜித்ராவில் ஆற்றிய உரையில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமிருடின் கடந்த ஆகஸ்டு 9ஆம் தேதி சனுசிக்கு அனுப்பியிருந்தார். 

மாநிலத்தின் நதி துப்புரவுத்  திட்டம் தொடர்பாக சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடினை சனுசி அவதூறாகப் பேசியதாக அந்த  உரிமைகோரல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெர்ஜயா குழுமத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ  வின்சென்ட் டான்  1,000 கோடி வெள்ளி மதிப்பிலான கிள்ளான் ஆற்றுத் தூய்மைத் திட்டத்தை  செயல்படுத்த விரும்புவதாகவும் அதற்கு ஈடாக அந்த தொழிலதிபர் 600 ஏக்கர் நிலத்தை இலவசமாகப் பெறுவார் என்றும் பாஸ் தலைவரான சனுசி கூறியதாக அது குறிப்பிட்டது

பொது, படிப்பினை மற்றும் முன்மாதிரி இழப்பீட்டை சனுசி வழங்க வேண்டும் என்பதோடு  இத்தகையக் குற்றச்சாட்டுகளை அவர் மீண்டும் முன்வைக்காத வகையில் இடைக்கால  தடை உத்தரவும் வழங்கப்பட வேண்டும் என அமிருடின் கோரியுள்ளார்.

இதற்கிடையில், வாதியின் வழக்கறிஞர் ஹைஜான் ஓமாரை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​​வழக்குத் தாக்கல் செய்துள்ளதை அவர் உறுதிசெய்ததோடு  இம்மனு மீதான நிர்வாக வழக்கு வழக்கு அக்டோபர் 3இல் நடைபெற நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.


Pengarang :