ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டை மேம்படுத்துவதற்குரிய உத்வேகத்தை பெலாங்கை தேர்தல் வெற்றி வழங்கியுள்ளது- அன்வார் பெருமிதம்

கோலாலம்பூர், அக் 8- நேற்று நடைபெற்ற பெலாங்கை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிஸார் அபு ஆடாமிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஒற்றுமை அரசிலுள்ள சகாக்களின் ஒத்துழைப்பின் வாயிலாக பூலாய் நாடாளுமன்றத் தொகுதி,  சிம்பாங் ஜெராம் சட்டமன்ற வெற்றிகளுக்குப் பின்னர் இந்த தொகுதியிலும் வெற்றி தொடர்கிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார். இந்த ஒற்றுமையின் வாயிலாக அவதூறுகளையும் குறுகிய நோக்குடைய இனப் பிரசாரங்களையும் முறியடிக்க முடிந்துள்ளதாக அவர் சொன்னார்.

மடாணி பொருளாதாரக் கோட்பாட்டிற்கேற்ப மக்களுக்கு வளப்பத்தைத் தருவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்குரிய உத்வேகத்தை இந்த வெற்றி ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் வாக்காளர்களுக்கும் இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த  தேர்தல் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.

நேற்று நடைபெற்ற பகாங் மாநிலத்தின் பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிஸார் அபு ஆடாம் 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பெந்தோங் அம்னோ தொகுதி செயல்குழுத் தலைவரான அமிஸாருக்கு 7,324 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமாட் 4,375 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் ஹாஸ்லிலெல்மி ஜூஹாஸ்னி 47 வாக்குகளையும் பெற்றனர்.

பெலாங்கை தொகுதி உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

 


Pengarang :