HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று கடந்த வாரம் 57.3 விழுக்காடு அதிகரிப்பு- புதிய திரிபுகள் கண்டுபிடிப்பு

புத்ராஜெயா, டிச 3 –  இவ்வாண்டு நவம்பர் 19 முதல் 25 வரையிலான 47வது தொற்று வாரத்தில்  மொத்தம் 3,626 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் பதிவான 2,305 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில்  57.3 விழுக்காடு அதிகமாகும்.

இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில்  48 விழுக்காட்டினர் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்களில் 98 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

கடந்த  41வது நோய்த் தொற்று வாரத்திலிருந்து  47வது நோய்த் தொற்று வாரம் வரை  வார அடிப்படையிலான எண்ணிக்கை 1,000த்தை தாண்டியது. விகிதாசார அடிப்படையில் இது 7.1 முதல் 57.3 விழுக்காடு வரை இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

எட்டு கோவிட்-19 நோய்த் தொற்று மையங்கள்   இன்னும் தீவிர நிலையில் உள்ள வேளையில் அதில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

கடந்த  47வது நோய்த் தொற்று வாரம் வரை பதிவான மொத்த தொற்று மையங்களின் எண்ணிக்கை 7,248 ஆகும். அவற்றில் பெரும்பாலானவை பள்ளிகளை உட்படுத்திய தொற்று மையங்களாகும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளின்  விகிதம் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது  47வது நோய்த் தொற்று வாரத்தில்  100,000 பேருக்கு 2.9 ஆக அதிகரித்துள்ளது எனக் கூறிய டாக்டர் ராட்ஸி, தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகளின் பயன்பாடு  0.4 சதவீதமாகவும், ஆபத்தில்லா நோயாளிகளுக்கான படுக்கை விகிதம் 0.9 சதவீதமாகவும்  வென்டிலேட்டர்கள் தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்காக விகிதம்  0.2 சதவீதமாக உள்ளது என்றார்.

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தற்போதுள்ள சுகாதார வசதிகளுக்கு அதனால் சுமை இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், 47வது நோய்த் தொற்று வாரத்தில்  மொத்தம் நான்கு புதிய ஒமிக்ரோன் வகை திரிபுகள்  பதிவாகியுள்ளதையும்  அவர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :