HEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ள  20 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று

ஜெலி, டிச 31 – இம்மாதம்  22 முதல் நேற்று வரை கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள வெள்ள  நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களில் மொத்தம்  20  பேரிடம் கோவிட் -19 நோய்த் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.

கிளந்தானில் 15  கோவிட்-19 சம்பவங்களும்  திரங்கானுவில்  எஞ்சிய  ஐந்து சம்பவங்களும்  பதிவாகியுள்ளன என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளது.  17 பேர் இரண்டாம் கட்டப் பாதிப்பையும்  இருவர் மூன்றாம் கட்டப் பாதிப்பையும்  ஒருவர் நான்காம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நான்காம் கட்ட  கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பை எதிர்நோக்கியவர்  கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்ட  முதியவராவார். இருப்பினும், அந்நோயாளி நேற்று கிளந்தான்,  ஜெலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப  அனுமதிக்கப் பட்டார் என்று அவர் இன்று ஜெலி 1  தேசியப் பள்ளியில் தங்கியுள்ள  வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப்  பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுகாதார துணைத் தலைமை  இயக்குநர் (பொது சுகாதாரம்) டத்தோ டாக்டர் நோர்ஹயாட்டி ருஸ்லி மற்றும் கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் ஆகியோரும் கலந்து இந்நிகழ்வில்  கொண்டனர்.

வெள்ளம் பாதித்த மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு  சுகாதார சேவைகளை வழங்குவதற்காக 297 மருத்துவக் குழுக்கள், 286 சுகாதாரக் குழுக்கள், 102 மனநல மற்றும் உளவியல் ஆதரவு சேவைக் குழுக்கள் மற்றும் 286 சுகாதார விழிப்புணர்வு ஊக்குவிப்புக் குழுக்கள் இதுவரை நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜூல்கிப்ளி கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் பணியாளர்களை அனுப்ப வேண்டிய அவசியம் தற்போது இல்லை.  ஆனால் தேவை ஏற்பட்டால் அப்பகுதிகளுக்கு உதவிக் குழுக்களை அனுப்ப நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :