ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024இல் மலேசியர்களுக்கு சிறப்பான, பிரகாசமான எதிர்காலம்-  பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜன 1 –  ஒற்றுமை அரசாங்கம்  நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இன்று மலரும் 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தேசியப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முயற்சிகள் மீது  அரசாங்கம் கவனம்  செலுத்தும் என்று  நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

மலேசியாவை இப்பிராந்தியத்தில் சிறந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு  அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், அமலாக்கத் தரப்பினர் பாதுகாப்பு அமைப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையை அவர்  வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும்  சூழலில் நமது பொருளாதார வளர்ச்சி நான்கு சதவீதமாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதைப் பொதுமக்களுக்கு சுருக்கமாக அறிவிப்பது பொருத்தமானது எனக் கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

இது மிகச் சிறந்த ஒன்றாகும். ஆனால் பணவீக்கத்தை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகக் குறைப்பது மற்றும் வேலையின்மை விகிதத்தை மிகக் குறைந்த அளவிற்கு குறைப்பது உட்பட பிற  பணிகளும் உள்ளன என்று அவர் தனது முகநூலில் நேற்றிரவு வெளியிட்ட காணொளியில் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் முழு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இது நிர்வாகம் மற்றும் பொதுச் சேவையை மேம்படுத்துவதற்கான   அழைப்பு என்றும் பிரதமர் சொன்னார்.

அதே நேரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், அரச மலேசிய போலீஸ் படை, அரச  மலேசிய சுங்கத் துறை மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவை தங்கள் கடமைகளை திறம்பட நிறைவேற்றியதற்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.


Pengarang :