ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் 2.73 கோடி சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய டூரிசம் மலேசியா நம்பிக்கை

சிப்பாங், பிப் 12- இவ்வாண்டில் 2 கோடியே 73 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என டூரிசம் மலேசியா நம்பிக்கை  கொண்டுள்ளது. வாடகை விமான இணை மானிய ஊக்குவிப்புத் திட்டம், விசா விலக்களிப்புத் திட்டம் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் அதிகளவிலான சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் இந்த இலக்கை அடைவதற்கு துணை புரியும் என அது நம்புகிறது.

கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட 1 கோடியே 91 லட்சம் சுற்றுப்பயணிகளைக் காட்டிலும் அதிகமாக அதாவது 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டிற்கு வந்ததாக டூரிசம் மலேசியா தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அமார் அப்துல் காபார் கூறினார்.

மலேசியாவுக்கு அதிக வாடகை விமானங்கள் வருவதை தாங்கள் ஊக்குவிப்பதோடு அதில் கூடுதல் கவனமும் செலுத்தவிருப்பதாகக் கூறிய அவர், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய புதிய பயணத் தடங்களும் அதிகப் பயணச் சேவைகளும் தேவை என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகச்  சொன்னார்.

மலேசியாவுக்கான விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மலேசியாவுக்கு வாடகை விமான இணை மானியத் திட்டம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. அதிக வாடகை விமானங்கள் நாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக வாடகை விமானங்களுக்கான அனைத்துலக எல்லை விமான மானியத்தையும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இத்தகைய மானியங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிகமான வாடகை விமானங்கள் மலேசியாவுக்கு வரும். அந்த விமானங்கள் கோலாலம்பூருக்கு மட்டுமின்றி கோத்தா கினபாலும், பினங்கு, தாவாவ் போன்ற நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் ஷென்யாங் லியானிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து முதல் பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்  வரவேற்கும் நிகழ்வில் கலந்து கெண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :