NATIONAL

காட்டுத் தீ காரணமாகப் புரோகா ஹில் தற்காலிகமாக மூடப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 20 – இம்மாதம் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட
காட்டுத் தீயைத் தொடர்ந்து புரோகா மலையேற்றப் பாதை மற்றும்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைப் பொது மக்களுக்கு மூட சிலாங்கூர்
மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை புக்கிட் புரோகா பகுதி பொது மக்களுக்கு
மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு அதன் நுழைவாயில்களில்
ஒட்டப்பட்டுள்ளதோடு தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பொது
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

மலையேறும் நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் இப்பகுதி
பிரசித்தி பெற்று விளங்குவதே இதற்கான காரணமாகும். இதன்
தொடர்பிலான ஆகக்கடைசி நிலவரங்களை அத்துறை தனது
அதிகாரப்பூர்வ அகப்பக்கம் மற்றும் பேஸ்புக் மூலம் அவ்வப்போது
தெரிவித்து வரும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த வனப்பகுதியில் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்புத் துறை
தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர், தீ ஏற்படும் சாத்தியம்
உள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருக்கும்படி பொது
மக்களை கேட்டுக் கொண்டார்.

பொது இடங்களில் குறிப்பாக வனப்பகுதிகளில் சிகிரெட் துண்டுகளை
வீசுவது, திறந்த வெளியில் தீயிடுவது போன்ற நடவடிக்கைகளை
தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்துரைத்த ஜமாலியா,
தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பொது தற்காப்புப்
படையினர், அவசர உதவி அமைப்பினர் மற்றும் உலு லங்காட் மாவட்ட
நில அலுவலகம் உள்ளிட்ட தரப்புகளைச் சேர்ந்த 64 பேர் சம்பவ இடத்தில்
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொன்னார்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட தீயை முழுமையாக
அணைப்பதற்கு அவர்களுக்கு சுமார் எட்டு மணி நேரம் பிடித்தது. வெப்ப
வானிலை மற்று குன்றின் உச்சியில் வீசிய பலமான காற்று ஆகியவை
காரணமாக தீ விரைவாகப் பரவியது. இதனால் தீயைக் கட்டுப்படுத்தும்
பணிகளில் சிரமம் ஏற்பட்டது என்றார் அவர்.


Pengarang :