ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நான்கு குற்றச்சாட்டுகளை நிலை நிறுத்தும் முடிவுக்கு எதிராக டான்ஸ்ரீ மொஹிடின் மேல் முறையீடு

கோலாலம்பூர், மார்ச் 28- தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 23 கோடியே 25 வெள்ளி ஊழல் தொடர்பான நான்கு அதிகாரத் துஷ்பிரேயாகக் குற்றச்சாட்டுகளை நிலை நிறுத்தும் முந்தைய நீதிபதிகள் குழுவின் முடிவை மறுஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ மொஹிடின் யாசின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

முன்னதாக உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அந்த நான்கு குற்றச்சாட்டுகளையும் மீண்டும் நிலைநிறுத்துவது தொடர்பான தீர்ப்பை நீதிபதி டத்தோ ஹாட்ஹாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான மூவரடங்கிய மேல் முறையீட்டு நீதிபதிகள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வழங்கியிருந்தனர்.

இந்த முறையீட்டு மனுவை டான்ஸ்ரீ மொஹிடின் சேத்தன் ஜெத்வானி அண்ட் கம்பெனி வழக்கறிஞர் நிறுவனம் மூலம் தாக்கல் செய்துள்ளது ஊடகங்களுக்கு கிடைத்த அந்த மனு தொடர்பான அறிக்கையின் வழி தெரிய வந்துள்ளது.

இதனிடையே, இந்த முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை வழக்கறிஞர் டத்தோ ஹிஷ்யாம் தே போ தெய்க் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக கூட்டரசு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவை தமது தரப்பு மீட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

தனக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் நிலை நிறுத்தும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மொஹிடின் கடந்த மார்ச் 1ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நான்கு அதிகாரத் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிப்பதோடு விடுதலையும் செய்வதாக உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை நிலை நிறுத்தும் அதே வேளையில் அந்த உத்தரவை தள்ளுபடி செய்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்யும்படியும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.


Pengarang :