ANTARABANGSA

ருவாங் எரிமலையில் தொடரும் வெடிப்புகள்-  சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது இந்தோனேசியா

ஜகார்த்தா, ஏப் 18 – சுலாவேசி தீவு அருகே உள்ள எரிமலை கடந்த இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் குமுறத் தொடங்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள், ருவாங் மலைக்கான எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளனர் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.

725 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் ஒரே தினத்தில் ஏற்பட்ட இரு வெடிப்புகளின் விளைவாக   3,000 மீட்டர் உயரத்திற்கு வானில் சாம்பல் சூழ்ந்ததைத் தொடர்ந்து  இந்த எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டது.

எரிமலைக் குமுறல்களால் பாறைகள் சரியும் காரணத்தால் பேரலைகள் அல்லது சுனாமி ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி  அருகிலுள்ள  டகுலாண்டாங் தீவின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை  எரிமலை மற்றும் புவியியல் அபாயத் தணிப்பு மையத்தின் தலைவர் ஹென்ட்ரா குணாவான் கேட்டுக் கொண்டார்.

ருவாங் தீவில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு பள்ளத்தாக்கின் ஆறு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு விலக்கு மண்டலத்தை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர். இது தகுலாண்டாங் தீவின் தென்மேற்கு பகுதி வரை நீண்டுள்ளது.

ருவாங் மலையின் குமுறலால்  சாம்பல், பாறைகள் மற்றும் சரளைகளை பீறிட்டெழுந்து  ஐந்து கிலோமீட்டர் வரை பரவி டகுலாண்டாங் தீவின் கடலோரப் பகுதிகளில் விழுந்தன.  விழுந்த பாறைகள் மற்றும் கற்களால் பல குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி கூறினார்.

எரிமலைக்கு தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு சுலாவேசியின் மாநிலத் தலைநகரான மனாடோவில் உள்ள சாம் ரதுலாங்கி விமான நிலையத்தை மூடுமாறு இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த ருவாங் எரிமலை கடைசியாக 2002ஆம் ஆண்டில்  வெடித்தது.  அது கக்கிய  பைரோகிளாஸ்டிக்  துகள்களால் நிலம் மற்றும் உள்ளூர் குடியிருப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.


Pengarang :