ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

கெஅடிலான்  அரசாங்கத்தில் இருந்தாலும் சீர்திருத்தப் போராட்டம் தொடரப்பட வேண்டும்- ரபிஸி வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 21 – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் புத்ரா ஜெயாவை பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் கட்சி (கெஅடிலான்) வழி நடத்தினாலும் சீர்திருத்தத்திற்காக போராடும் அதன் இலக்கில் கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்று கட்சித் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி வலியுறுத்தினார்.

கட்சி உறுப்பினர்களிடையே மனநிறைவு கொள்ளும் போக்கிற்கு  எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், மக்களின் நம்பிக்கை சிதைவதைத் தவிர்ப்பதற்கு “லவான் தெத்தாப் லவான்” (உறுதியாகப் போராடுவோம்) என்ற உணர்வை உருவாக்குவது முக்கியம் என நினைவூட்டினார்.

எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை.  அதுதான் எங்கள் கட்சியின் சீர்திருத்தப் போராட்டத்திற்கான சாராம்சம். தங்கள்  வாழ்க்கையை எளிதாக்குவதற்கு முந்தைய அரசாங்கம் பயன்படுத்திய  நடைமுறைகளை நாமும் அப்படியே பின்பற்ற முடியாது.

கட்சியை பலப்படுத்த முந்தைய ஆளும் கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால்   நாங்களும் அதையே செய்ய முடியாது. அரசு செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள்  நிதி வசூல் செய்தார்கள் என்றால் எங்களாலும் அதனைப் பின்பற்ற முடியாது. மாறாக, கட்சியை வளர்ப்பதற்கு நாங்கள் எங்கள் சொந்த பணத்திலிருந்து நிதி திரட்டினோம் என்று அவர் குறிப்பிட்டார்.

முந்தைய அரசாங்கம் உதவிகளை வழங்கவும்  பெரிய அடிப்படை வசதி திட்டங்களை அமல்படுத்தவும் கடனாகப் பெற்றத் தொகையை பயன்படுத்தியிருந்தால்  நாங்களும் அதைச் செய்ய முடியாது. காரணம் எதிர்கால சந்ததியினருக்கு அதனால் கடன் சுமை ஏற்படும் என்றார் அவர்.

ஆகவேதான் சீர்திருத்த அடிப்படையிலான கட்சி என்ற இலக்கை கெஅடிலான் காலவரையின்றி தொடரும். இதுவரை தீர்க்கப்படாத பிரச்னைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து புதிய வழிகளைத் தேடுவோம்  என ரபிஸி தெரிவித்தார்.

இங்குள்ள  ஐடியல் மாநாட்டு மையத்தில்  இன்று நடைபெறும் கெஅடிலானின் 25 வது ஆண்டு விழா நிறைவு விழா கொண்டாட்டத்தின் போது சுமார் 3,500 பேராளர்கள்
மத்தியில் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவை ஆட்சி செய்த முந்தைய கட்சிகள் மக்களுக்கான தங்கள் பொறுப்புகளை மறந்துவிட்ட காரணத்தால் உச்சத்தில் இருந்த போதிலும் தேர்தலில் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன என்று ரபிஸி  மேலும் கூறினார்.


Pengarang :