ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெஅடிலான் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை 11 லட்சம் ஆக உயர்வு- சிலாங்கூரில் 344,386 பேர் அங்கத்துவம்

ஷா ஆலம், ஏப் 21- பார்ட்டி கெஅடிலான் கட்சியில் (கெஅடிலான்) உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி வரை அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 53 ஆயிரத்து 212 பேராக பதிவாகியுள்ளது.

மிக அதிகமான உறுப்பினர்களை அதாவது 344,386 பேரை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்கி வருவதாக கெஅடிலான் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அதற்கு அடுத்த நிலையில் 185,044 உறுப்பினர்களுடன் சபா மாநிலமும் 86,315 உறுப்பினர்களுடன் சரவா மாநிலமும் 83,668 உறுப்பினர்களுடன் பேராக் மாநிலமும் உள்ளதாக அவர் சொன்னார்.

ஐந்தாவது இடத்தில் கெடா மாநிலம் உள்ளது. இம்மாநிலத்தில் 68,726 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெறும் கெஅடிலான் கட்சியின் 25வது பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் இவ்வாண்டு மார்ச் 21ஆம் தேதி வரை கட்சியில் 16,529 பேர் புதிதாக உறுப்பியம் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இக்காலக் கட்டத்தில் சிலாங்கூரில் 5,770 பேரும் கிளந்தானில் 2,027 பேரும் ஜோகூரில் 1,878 பேரும் பினாங்கில் 1,400 பேரும் சபாவில் 1,115 பேரும் புதிய உறுப்பினர்களாக பதிந்துள்ளனர் என்றார் அவர்.

இந்த ஒரு நாள் மாநாட்டின் இறுதியில் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய உரை நிகழ்த்துவார்.


Pengarang :