ECONOMY

தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் நடமாடும் செல்வேக்ஸ் திட்டத்தில் பங்கேற்பீர்- மந்திரி புசார் கோரிக்கை

ஷா ஆலம், செப் 21- தடுப்பூசியை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசின்  நடமாடும்  செல்வேக்ஸ் திட்டத்தில் பங்கேற்கும்படி அந்நிய நாட்டினர் உள்பட மாநிலத்திலுள்ள அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நோய்த் எதிர்ப்பாற்றல் கொண்டு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இம்மாதம் தொடங்கி மாநிலத்தின் பல தொகுதிகளில் நடமாடும் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“அனைவரும் பாதுகாப்பு பெறும் வரை தனிநபர் யாருக்கும் பாதுகாப்பில்லை“ என்ற சொல்லாடலுக்கேற்ப சிலாங்கூர் மாநில மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்யும் வகையில் நடமாடும் செல்வேக்ஸ் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார் அவர்.

இந்த தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் உள்பட அனைத்து தரப்பினரையும் சிலாங்கூர் மாநி அரசு வரவேற்கிறது என்று இன்று கொண்டாடப்படும் பதார்த்த விழாவை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19  நோய்த் தொற்று ஆண்டு முழுவதும் பரவலாக காணக்கூடிய எண்டமிக் நோயாக மாறி விட்டதால் புதிய இயல்பில் அந்நோயுடன் வாழ்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் அவர்  கேட்டுக் கொண்டார்.

நாம் கடந்த 18 மாதங்களாக கோவிட்-19 நோயுடன் போராடி வருகிறோம். ஈராண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரியை நன்கு அறிந்து கொண்டோம் என்றார் அவர்.

மாநில மக்கள் யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு கடந்த 12 ஆம் தேதி தொடங்கி  நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.


Pengarang :