PBTSELANGORTOURISMYB ACTIVITIES

கின்ராரா தொகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 11- பொங்கல் திருநாளையொட்டி கின்ராரா சட்டமன்றத் தொகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் வழங்கப்பட்டன.

சுமார் 30 வெள்ளி மதிப்பிலான பொங்கல் பானை, அரிசி, பால், சர்க்கரை, முந்திரி பருப்பு, முந்திரிப் பழம், கரும்பு நெய், ஏலக்காய் போன்ற பொருள்கள்  அடங்கிய பொட்டலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த உதவிப் பொருள்களை வழங்குவதில் வசதி குறைந்தவர்கள் குறிப்பாக கோவிட-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குடும்பத்தினருடன் சிறிய அளவில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்குரிய வாய்ப்பினை வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

அறுவடைக் காலம் முடிந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வோராண்டும் ஜனவரி 14ஆம் தேதி அனுசரிக்கப்படும் இந்த பொங்கல் திருநாள் முந்தைய ஆண்டுகளில் பெரிய அளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.

தீபாவளி மற்றும் தைப்பூசத்திற்கு அடுத்து தமிழர்களின் மிகப்பெரிய விழாவான பொங்கல் உழவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக  கொண்டாடப்படும்.

 


Pengarang :