ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தேசிய தடுப்பூசி இயக்கம் அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்- முதலாளிகள் சம்மேளனம் கருத்து

கோலாலம்பூர், பிப் 17- தேசிய தடுப்பூசி இயக்கம் அமலாக்கப்படுவதன் வழி அந்நிய முதலீட்டார்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து  உயர் மதிப்பு கொண்ட முதலீடுகளை தக்க வைத்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மலசிய முதலாளிகள் சம்மேளனம் கருதுகிறது.

இதன் வாயிலாக உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேர்மறையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அச்சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் சம்சுடின் பார்டான் கூறினார்.

அதோடு மட்டுமின்றி, இந்த தேசிய தடுப்பூசித் திட்டம் பயனீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்கள் அதிகமாக செலவு செய்வதன் வாயிலாக பொருளாதாரமும் உள்நாட்டுச் சந்தையும் விரிவடையும் என்றார் அவர்.

இந்த தடுப்பூசி இயக்கம் முறையாக  செயல்படுவதை உறுதி செய்வதில் முதலாளிகளும் பொது மக்களும் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய பிரஜைகள், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத அந்நிய நாட்டினர், அரசியல் புகலிடம் பெற்றவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த  தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவர் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். இக்காலக்கட்டத்தில் 32,000 வர்த்தகங்கள் மூடப்பட்டு சுமார் ஒரு லட்சம் பேர் வேலையை இழக்க நேர்ந்ததாக அவர் கூறினார்.


Pengarang :