PBTSELANGORYB ACTIVITIES

ஸ்ரீ கெம்பாங்கானில் வரும் சனிக்கிழமை இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மார்ச் 25– வரும் சனிக்கிழமையன்று ஸ்ரீ கெம்பாங்கானில் இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறவுள்ளது. இச்சோதனையில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு சுற்றுவட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான இச்சோதனை இயக்கம் தாமான் புக்கிட் பிளிம்பிங், ஜாலான் மேடான் பிளிம்பிங்கில் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தாமான் பிளிம்பிங், தாமான் ஜூவாரா ஜெயா, பண்டார் டாமாய் பெர்டானா, கம்போங் பாரு பலாக்கோங் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் இச்சோதனையில் பங்கு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக http://screening.selangkah.my  என்ற செலங்கா அகப்பக்கம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக இலவச பரிசோதனைகளை மாநிலம் முழுவதும் மேற்கொள்வதற்கு கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக 60 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும்  நெரிசல்மிகுந்த குடியிருப்பு பகுதிகளை மையமாக கொண்டுச் இச்சோதனை நடத்தப்படுவதாக கூறிய அவர், இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு சோதனைகளை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :