PBTSELANGOR

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக சிலாங்கூர்-கோலாலம்பூரில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், மார்ச் 25:- அடுத்த வாரத்திலும் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலும் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.

நீர் விநியோக நடவடிகைகள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக முக்கிய மையங்களில் பராமரிப்பு பணிகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொள்வதன் காரணமாக அட்டவணையிடப்பட்ட இந்த நீர் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரின் விநியோக அளவு, பயனீட்டு இடங்களுக்கான தொலைவு, நீர் அழுத்தம் உள்ளிட்ட விஷயங்களை பொறுத்து நீர் விநியோகம் எப்போது வழக்க நிலைக்கு திரும்பும் என்று முடிவு செய்யப்படும்.

இக்காலக்கட்டத்தில் போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்வதோடு சிக்கனமாக நீரை பயன்படுத்தும்படியும் பயனீட்டாளர்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா  பாஸ்ரி  அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டார்.

நீர் விநியோகத் தடை ஏற்படும் இடங்கள் வருமாறு-

  1. ஷா ஆலம், செக்சன் 15, பெர்சியாரான் சிலாங்கூரில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று வட்டாரங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும்.

– மார்ச் 30 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகத் தடை அமலில் இருக்கும்.

– குழாய்களை மாற்றும் மற்றும் இணைக்கும்  பணிகள் காரணமாக மார்ச் 30 காலை 9.00 முதல் இரவு 9.00 வரை பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தில் ஐந்து இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும். ஏப்ரல் முதல் தேதி காலை 9.00 மணிக்கு நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும்.

  1. கிளாங் கேட்ஸ் நீர்த் தேக்கத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இரு வட்டாரங்களில் உள்ள 58 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும். ஏப்ரல் 6ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி 68 மணி நேரத்திற்கு இப்பகுதிகளில் நீர்விநியோகம் துண்டிக்கப்படும். ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு நீர் விநியோகம்வழக்க நிலைக்கு திரும்பும்.

கோம்பாக்  வட்டாரத்தின் 12 இடங்களிலும் கோலாலம்பூர் வட்டாரத்தின் 46 இடங்களிலும் ஏற்படும் நீர் விநியோகத் தடை ஏப்ரல் 9.00ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பும்.

இந்த பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய நீர் சேவை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான மேல் விபரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் வாயிலாக  தெரிந்து கொள்ளலாம்.


Pengarang :