ECONOMYSELANGORTOURISM

தடுப்பூசிக்கான பதிவை அதிகரிக்க இமுனிசெல் திட்டம் உதவும்- மந்திரி புசார் நம்பிக்கை

ஷா ஆலம், ஏப் 6– சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை வரை கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு 56 விழுக்காட்டினர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இமுனிசெல் எனப்படும் சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசி அணுகுமுறைத் திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

விவேக கைப்பேசி மற்றும் இணைய வசதி இல்லாதது, இணையம் வாயிலாக பதிவு செய்யத்  தெரியாதது  போன்ற காரணங்களால் குறைவான எண்ணிக்கையிலானோர் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த இமுனிசெல் திட்டத்தின் மூலம் பிரத்தியேக முகப்பிடங்களில் வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தி அவர்களை இத்திட்டத்தில் பதிவு செய்து அடையாள அட்டையையும் வழங்குவோம் என்றார் அவர்.

கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு திட்டத்தை மேற்கொள்ள நமக்கு பெரும் எண்ணிக்கையிலான தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பூர்வக் குடியினரை இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் பயணம் செய்து பதிவு  நடவடிக்கையை மேற்கொள்வர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இரவுச் சந்தைகள் மற்றும் பல்நோக்கு கடைகளில்  அமைக்கப்படும் முகப்பிடங்கள் அல்லது மைசெஜாத்ரா செயலி வாயிலாக இலக்காக கொள்ளப்பட்ட தரப்பினரை பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைவரும் தடுப்பூசித் திட்டத்தில் பதிந்து கொள்வதை உறுதி செய்வதற்காக இமுனிசெல் திட்டம் கடந்த ஞாயிறன்று தொடக்கப்பட்டது.


Pengarang :