MEDIA STATEMENTNATIONALSELANGOR

அதிக தடுப்பூசிகளை சிலாங்கூருக்கு வழங்குவீர்- மத்திய அரசுக்கு கோரிக்கை

ஷா ஆலம், மே 21– அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கும் நோயாளிகள் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கம் இந்த தடுப்பூசி திட்டம் அவசியம் தேவைப்படுவதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தடுப்பூசி விநியோகம் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் மருந்துகளின் அளவைப் பொறுத்து சுகாதார அமைச்சு அவற்றை பகிர்ந்தளிக்கும் என அவர் சொன்னார்.

தடுப்பூசி செலுத்தும் மையங்களை தயார் செய்வதில் மட்டுமே மாநில அரசு உதவும். இம்மாதம் 17ஆம் தேதி வரை மாநிலத்தில் 3.3 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

மாநில மக்கள் மற்றும் இங்குள்ள அந்நியத் தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முப்பது லட்சம் முதல் ஐம்பது லட்சம் தடுப்பூசிகளை சொந்தமாக வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடக்க கட்டமாக 12 லட்சத்து 50ஆயிரம் மாநில மக்களுக்காக 25 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அடுத்த மாதம் இது முழுமை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஹெல்மி ஜக்காரியா கூறினார்.


Pengarang :