HEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

பத்தாங் காலி, ஜெராம் தொகுதிகளில்  கோவிட்-19 பரிசோதனை- 2,616 பேர் பங்கேற்பு 

ஜெராம், ஜூன் 8- பத்தாங் காலி மற்றும் ஜெராம் தொகுதிகளில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 2,616 பேர் பங்கு கொண்டனர். 

அவர்களில் 65 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதற்கான சாத்தியம் கண்டறியப்பட்டதாக எஸ்.டி.எப்.ஒ. எனப்படும் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ரோஸ்லி கூறினார்.

பத்தாங் காலி தொகுதியில் நடைபெற்ற சோதனையில் 1,687 பேர் பங்கேற்ற வேளையில் அவர்களில் 53 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. ஜெராம் தொகுதியில் பங்கு கொண்ட 931 பேரில் 12 பேர் நோய்க்கான அறிகுறியைக் கொண்டிருந்தனர் என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள்  சுய தனிமைப்படுத்துதல் நடவடிக்கை தங்களை தயார் படுத்திக் கொள்ளும் அதே வேளையில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் முறையாக கடைபிடிப்பர் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஏற்பாட்டிலான இந்த இலவச பரிசோதனை இயக்கம் புக்கிட் செந்தோசா சமூக மண்டபத்திலும் ஜெராம், கம்போங் புக்கிட் கூச்சாய் தெங்கா சமூக மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பதற்றமடைவதை தவிர்க்க வேண்டும் என்பதோடு மேல் கட்ட சோதனைக்காக சுகாதார அமைச்சிடமிருந்து அழைப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று டாக்டர் முகமது ஃபர்ஹான் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :