MEDIA STATEMENTPBT

வாக்குமூலப் பதிவின் போது ஆடவரை போலீசார் தாக்கினரா? சிலாங்கூர் போலீஸ் தலைவர் மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 17- குடும்ப வன்முறை தொடர்பில் மனைவி செய்திருந்த புகார் சம்பந்தமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கடந்த வாரம் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு சென்ற போது தாம் தாக்கப்பட்டதோடு கடுமையாகவும் நடத்தப்பட்டதாக ஆடவர் ஒருவர் செய்திருந்த புகாரை சிலாங்கூர் போலீசார் மறுத்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று  போலீஸ் நிலையத்தில் இருந்த தன் மனைவியைப் கண்ட அந்த ஆடவர் மிகவும் மூர்க்கமடைந்ததோடு அவரை கொல்லப் போவதாகவும் மிரட்டியதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

போலீஸ் நிலையத்தில் சத்தம் போட வேண்டாம் என்று போலீசார் அந்த ஆடவருக்கு ஆலோசனை கூறினர். எனினும், அந்த ஆலோசனையை பொருட்படுத்தாத அவர், ‘போலீஸ் போடோ‘ என்று கடுமையான வார்த்தைகளில் திட்டியதாகவும் அவர் சொன்னார்.

அந்த நபரை கைது செய்ய முயன்ற போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறைந்தபட்ச பலாத்காரத்தை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் போலீசாருக்கு ஏற்பட்டது என்றார் அவர்.

செர்டாங் போலீஸ் தலைமையகத்தில் தாம் தாக்கப்பட்டதோடு கடுமையாகவும் நடத்தப்பட்டதாக பட்டறை ஒன்றின் முன்னாள் நிர்வாகியான ஜோசப் பிரகாஷ் சுகுமாறன் என்ற ஆடவர் புகார் கூறியுள்ளதாக இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த சந்தேக நபர் மீது போதைப் பொருள் பயன்படுத்தியது உள்பட எட்டு குற்றப்பதிவுகள் உள்ளதாக கூறிய டத்தோ அர்ஜூனைடி, தொடக்கக்கட்ட பரிசோதனையில் அவ்வாடவர் போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளது என்றார்.

அந்த ஆடவருக்கு எதிராக 1967ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் 90வது பிரிவின் கீழ் கடந்த 11ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது. இது தவிர, 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவு ஆகியற்றின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ள அவர், தற்போது ஜாமீனில் வந்துள்ள நிலையில் விசாரணையின் போது தாம் தாக்கப்பட்டதாக கூறி பண்டார் கின்ராரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


Pengarang :