ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கிள்ளான் மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரிப்பு- மருத்துவ உபகரணங்களை வழங்க பொது மக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 2- அதிகரித்து வரும் கோவிட்-19 நோயாளிகளை சமாளிப்பதில் தங்களுக்கு உதவும்படி பொது மக்களுக்கு கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மருத்துவமனைக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து உதவி வரும் அனைத்து தரப்பினருக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கூறினார்.

மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் முன்களப் பணியாளர்களின் சுமையைக் குறைப்பதற்கு பொதுமக்களின் உதவி தங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

பொதுமக்களிடமிருந்து நன்கொடை கிடைக்காவிட்டால் கோவிட்-19 நோயாளிகளின் தேவைகளை கவனிக்க முடியாத சூழல்  ஏற்படும் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக பிரபல சமய சொற்பொழிவாளர் எபிட் லியு பஸ் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.

இது தவிர, பிராணவாயுவை அடர்த்தியாக்கும் 12 சாதனங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பபிஸ்மா எனப்படும் சமூக அமைப்பும் இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு கொள்கலன் ஒன்றை மஇகாவும் வழங்கியுள்ளதாக  அது தெரிவித்தது.


Pengarang :