ECONOMYMEDIA STATEMENT

வெள்ளம் காரணமாக சிலாங்கூர் உள்பட 5 மாநிலங்களில் 1,000 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், அக் 21-  சிலாங்கூர் உள்பட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

மலாக்கா மாநிலத்தில் மலாக்கா தெங்கா, ஜாசின், அலோர் காஜா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 155 குடும்பங்களைச் சேர்ந்த 590 பேர் 9 தற்காலிக நிவாரண மையங்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.

சிலாங்கூரில் நேற்று பிற்பகல் தொடங்கி பெய்த அடை மழை காரணமாக ஒன்பது பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று அதிகாலை 5.30 மணி வரை 267 பேர் நான்கு தற்காலிக மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

சிப்பாங் வட்டாரத்திலுள்ள சூராவ் அபாடி, பாலாய் ராயா கம்போங் சாலாக் திங்கி, புக்கிட் தம்போய் ஆகிய நிவாரண மையங்களில் 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் கிள்ளான் டத்தோ ஹம்சா இடைநிலைப்பள்ளியில் மேலும் 31 பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நேராஸாம் காமிஸ் கூறினார்.

ஷா ஆலம், புக்கிட் கெமுனிங் ஜாலான் பத்து பாத்தாவில் இரு வீடுகளில் 0.6 மீட்டர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்வீடுகளைச் சேர்ந்த எழுவர் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, கெடாவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேரும் நெகிரில் செம்பிலானில் 25 பேரும் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Pengarang :