ECONOMYTOURISM

சிலாங்கூரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டு உயரும்

பெட்டாலிங் ஜெயா, நவ 24- அனைத்துலக நிலையில் சுற்றுலாத் துறை திறந்து விடப்பட்டுள்ளதால் அடுத்தாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்து வருவதால் அடுத்தாண்டு மாநிலத்திற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறித்து இலக்கு நிர்ணயிக்க இயலவில்லை என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்  கூறினார்.

சுற்றுப்பயணிகள் குறிப்பாக வெளிநாட்டினரின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 33 லட்சம் பேராக இருந்த இந்த எண்ணிக்கை கடந்தாண்டில் 15 லட்சத்து 70 ஆயிரமாக வீழச்சி கண்டது என்றார் அவர்.

அடுத்தாண்டில் சிலாங்கூருக்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறித்து நாங்கள் இலக்கு நிர்ணயிக்கவில்லை. ஆயினும், எல்லைகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக அதிகமான வெளிநாட்டினர் மாநிலத்திற்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயா, நியு வேர்ல்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பூசிங் சிலாங்கூர் சுற்றுலா கண்காட்சி மற்றும்  2021 சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாட்டின் தொடக்க விழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுற்றுலா அல்லது பொழுதுபோக்கின் போது எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அதே சமயம், எஸ்.ஒ.பி. விதிகளை மீறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்றங்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :