Bangunan Parlimen Malaysia kelihatan tersergam indah bagi Istiadat Pembukaan Mesyuarat Penggal Ketiga Parlimen Ke-14 pada 18 Mei 2020. Foto BERNAMA
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 அதிகரிப்பின் எதிரொலி : நாடாளுமன்றத்தை மூட வேண்டிய அவசியமில்லை- அமைச்சர் கைரி

புத்ரா ஜெயா, டிச 1- நாடாளுமன்றப் பணியாளர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் நாடாளுமன்றதை மூட வேண்டிய அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நோய்த் தொற்றைக் கையாளக் கூடிய கட்டமைப்பும் அனுபவமும் சுகாதார அமைச்சுக்கு உள்ளதாக அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

கோவிட்-19 பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது மற்றும் நோய்த் தொற்று கண்டவர்களை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

நம்மிடம்  வியூகங்களும் தடுப்பூசித் திட்டமும் உள்ளது. நோய்த் தொற்று பரவினாலும் கைவசம் இருக்கும் வியூகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, பொது முடக்கம், நாடாளுமன்றதை மூடுவது போன்ற கடும் நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய அவசியம் இராது என்று அவர் சொன்னார்.

நடப்புச் சூழலில், கடைசி வாய்ப்பாக நாடாளுமன்றத்தை மூடுவது உள்ளிட்டநடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான அனுபவம் நம்மிடம் உள்ளது. நாம் இப்போது தொடர்ச்சியாக கோவிட்-19 சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகவே, நாடாளுமன்ற நடவடிக்கைளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோவிட்-19 தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் நாடாளுமன்றப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட 84 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குவதற்கான சாத்தியம் உள்ளதா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

:


Pengarang :