ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூர் அரசின் உதவித் தொகையைப் பெற 200 வெள்ளி கட்டணமா? கும்பலுக்கு எதிராக குணராஜ் போலீஸ் புகார்

ஷா ஆலம், ஜன 5- சிலாங்கூர் அரசின் வெள்ள நிவாரண நிதிக்கான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 200 வெள்ளி கட்டணம் விதிக்கும் கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மூத்த குடிமக்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களை இலக்காக கொண்ட இந்த பொறுப்பற்ற கும்பல் கிள்ளான் வட்டாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

மக்கள் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் இருக்கும் இச்சூழலில் இத்தகைய ஏமாற்றுச் செயல்களை புரிவது கலங்கிய நீரில் மீன் பிடிப்பதற்கு ஒப்பானதாகும் என்று அவர் வர்ணித்தார்.

மக்களுக்கு உதவுவது போல் நடித்து மக்களை ஏமாற்றும் இக்கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி சிலாங்கூர் மாநில மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் சட்டமன்ற தொகுதி சேவை மையம் மற்றும் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொணடார்.

இத்தகைய மோசடி சம்பவங்கள் தொடராமலிருப்பதை உறுதி செய்வதற்காக தாம் இவ்விவகாரம் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :