ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

அடிப்படை வசதிகளை சீரமைக்க 51 ஊராட்சி மன்றங்களுக்கு 5 கோடி வெள்ளி நிதி

ஷா ஆலம், ஜன 9- நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 51 ஊராட்சி மன்றங்களுக்கு 5 கோடி வெள்ளியை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு ஒதுக்கீடு செய்யும்.

பல மாநிலங்கள் இன்னும் வெள்ளத்திலிருந்து மீளாத காரணத்தால் இந்த ஒதுக்கீட்டுத் தொகை அதிகரிக்கப்படுவதற்கும் சாத்தியம் உள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரிசால் நைனா மரைக்கான் கூறினார்.

இந்த ஐந்து கோடி வெள்ளி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே செய்யப்பட்ட ஒதுக்கீடாகும். இதுவே இறுதியான ஒதுக்கீடாக கருத முடியாது. பல மாநிலங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உதாரணத்திற்கு ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் நகரை கூறலாம். அங்கு வெள்ள நீர் இன்னும் தேங்கியுள்ளது என்றார் அவர்.

ஆகவே அந்த 51 ஊராட்சி மன்றங்களும் தங்களின் திட்டம் குறித்து எங்களிடம் தெரிவிக்கும் அத்திட்டங்கள் பெரியதாகவும் நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் இருந்தால் அது குறித்து மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சுகள் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 25 தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்திற்கு பிந்தைய மாபெரும் துப்புரவு இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாகிட் ஆகியோருடன் சுமார் 2,000 தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.


Pengarang :