ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

அஸாம் பாக்கி மீதான விசாரணையை சுயேச்சை அமைப்பு கண்காணிக்க வேண்டும்- சிலாங்கூர் கெஅடிலான் வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 9- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையை சுயேச்சை அமைப்பு கண்காணிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் வலியுறுத்தியுள்ளது.

அந்த விசாரணையில் மறைமுக தலையீடு இல்லாதிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாவதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

எம்.ஏ.சி.சி.யின் புதிய தலைமை ஆணையரை நியமிக்கும் பணி நாடாளுன்றத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். பொறுப்புமிக்க அப்பதவிக்கு நியமிக்கப்படுபவர் நேர்மையானவராகவும் அரசியல் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

பலவீனமான நிர்வாக முறையினால் நாடு அடைந்த துன்பங்கள் போதும். இது போதாதென்று அமலாக்க நிறுவனங்களின் முறையற்ற செயல்கள் மேலும் நாட்டை அலைகழிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் அஸாம் பாக்கி எம்.ஏ.சி.சி.யின் விசாரணை பரிவு இயக்குநராக இருந்த போது பங்குச் சந்தையில் இரு நிறுவனங்களின் 20 லட்சம் பங்குகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் இம்மாதம் 5 ஆம் தேதி விளக்கமளித்த அஸாம் பாக்கி, பொது சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு தன் சகோதரர் தனது கணக்கை பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.


Pengarang :