ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல் பிரசாரத்தில் வேலையின்மை, வீட்டுடைமை விவகாரங்களுக்கு கெஅடிலான் முன்னுரிமை

ஷா ஆலம், மார்ச் 4- ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் வேலையின்மை  மற்றும் வீட்டுடைமைப் தொடர்பான பிரச்சனைகள் மீது கெஅடிலான் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இவ்விரு பிரச்னைகளும் எந்தவொரு தீர்வுமின்றி நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வருவதாக கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் இளைய தலைமுறையினர் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்னையை நான் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். அவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் தேறி, டிப்ளோமா கல்வியில் தேறி, பல்கலைக்கழத்தில் தேறியிருக்கின்றனர். ஆனால் வேலையின்றி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் வேலை செய்வதும் இப்போது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றார் அவர்.

ஜோகூர் மாநிலத்தின் தென் பகுதியில் வீட்டுடைமைப் பிரச்னையும் கடுமையாக உள்ளது. மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கு பகுதியில் மட்டுமே மையமிட்டுள்ளன. கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் கைவிடப்பட்டுள்ளன. இது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

செமராங் தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் ஹர்யாத்தி அபு நாசீருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். இத்தொகுதியில் ஹர்யாத்தி நான்கு முனை போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

முன்னாள் கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் போட்டியிடும் லாயாங் லாயாங் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதும் அன்வார் இவ்விரு விவகாரங்கள் குறித்து பேசினார்.

 

 

 


Pengarang :