MEDIA STATEMENT

ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வைத்த தீ 52 வாகனங்களை அழித்தது- கீழறுப்பு செயலில் ஈடுபட்டவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 10- ஜிஞ்சாங், இந்தான் பைடூமரி, மக்கள் குடியிருப்பு பகுதியில் (பி.பி.ஆர்.) பகுதியில் 48 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கார்கள் தீக்கிரையாவதற்குக் காரணமாக இருந்த ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் உபகரணம் வாங்கித் தராத காரணத்தால் பழிவாங்கும் நோக்கில் ஆடவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு  31 வயதுடைய அந்தச் சந்தேக நபர் இட்ட தீ இதர வாகனங்களுக்கும் பரவியதாக ஜிஞ்சாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் 20 வயது மகனிடம் போதைப் பொருள் உபகரணத்தைத் தாங்கித் தரும்படி சந்தேகப் பேர்வழி கேட்டுள்ளான். எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பழி வாங்கும் நோக்கில் மது போதையில் அவரது மோட்டார் சைக்கிளின் இருக்கையில் அவ்வாடவன் தீ மூட்டியுள்ளான் என்று அவர் தெரிவித்தார்.

அந்தச் சந்தேக நபர் குற்றத்தை ஒப்பு கொண்டதாகவும் மோட்டார் சைக்கிளுக்குத் தாம் வைத்த தீ இதர வாகனங்களுக்கும் பரவும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்ததாகவும் ஏசிபி பே சொன்னார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் விசாரணைக்கு உதவ வருமாறு தாங்கள் கேட்டுக் கொள்வதாக இங்கு நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

அந்த சந்தேக நபர் மீது கொள்ளை, சண்டை, கொலை மற்றும் ஐந்து போதைப் பொருள் குற்றங்கள் உள்பட 14 குற்றப்பதிவுகள் உள்ளதாக கூறிய அவர், தீயிடல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்  435வது பிரிவின் கீழ் அவ்வாடவன் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்றார்.


Pengarang :