ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா விரைவுபடுத்தப்பட வேண்டும்-ஹராப்பான் கூட்டணி வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப் 8- வரும் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை தாங்கள் வரவேற்பதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கூறியுள்ளது.

அந்த கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா விரைந்து தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே தங்களின் முதன்மை நிபந்தனையாகும் என்று அக்கூட்டணியின் தலைவர் மன்றம் இன்று கூறியது.

நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுக் குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டதாக ஹராப்பான் தலைவர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் தெரிவித்ததாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஆகவே, அந்த கட்சித் தாவல் தடைச் சட்டத்தை விரைந்து தாக்கல் செய்து  அங்கீகரிக்கும்படி நாங்கள் பிரதமரை கேட்டுக் கொள்கிறோம். இவ்விவகாரம் தொடர்பான இரண்டாவது சிறப்புக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என அது கூறியது.

இந்த அறிக்கையில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியு பூக், அப்கோ கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வில்ப்ரட் மெடியஸ் தங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசியல் நிலைத்தன்மை மற்றும் உருமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன் நிபந்தனையாக இந்த கட்சித் தாவல் தடைச் சட்ட அமலாக்கம் இடம் பெற்றுள்ளதையும் ஹராப்பான் தலைவர் மன்றம் சுட்டிக் காட்டியது.


Pengarang :