ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஈக்களால் குடியிருப்பாளர்களுக்குத் தொல்லை- மீன் வளர்ப்பு குள உரிமையாளருக்கு அபராதம்

ஷா ஆலம், ஜூலை 1- தஞ்சோங் காராங், சுங்கை யூ பகுதியிலுள்ள மீன் வளர்ப்பு குள உரிமையாளருக்கு கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்தது.

அந்த குளத்தின் காரணமாக சுற்றுவட்டார குடியிருப்புகளில் ஈக்களின் தொல்லை மிகுந்த காணப்படுவதாக பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மை கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

அசௌர்கயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அறிக்கையும் 1976 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற சட்டத்தின் கீழ் அபராதமும் அந்த மீன் வளர்ப்புக் குள உரிமையாளருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாக அது குறிப்பிட்டது.

அந்த மீன் வளர்ப்பு குளத்தை சுற்றியுள்ளப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது என்று பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட நகராண்மைக் கழகத்தின் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மீன்களுக்கான உணவாகப் பயன்படுத்தப்பட்ட கோழிகளின் கழிவுகள் காரணமாக ஈக்கள் அப்பகுதியில் படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் தங்கள் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்கும் அதே வேளையில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என நகராண்மைக் கழகம் அறிவுறுத்தியது.


Pengarang :