ECONOMYMEDIA STATEMENT

பாண்டன் இண்டாவில் வெ. 20,000 மதிப்புள்ள கேபிள்கள் கொள்ளை-  மூன்று ஆடவர்கள் கைது

 கோலாலம்பூர், செப் 24-   அம்பாங்,  பாண்டான் இண்டாவில் உள்ள வர்த்தக மையத்தில் 20,000 வெள்ளி மதிப்புள்ள செப்புக் கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உள்ளூர் ஆடவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நேற்று காலை 10.30 மணியளவில் பத்து 6, ஜாலான் கோம்பாக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அதே நாளில் அவரது இரண்டு நண்பர்கள் ஸ்தாப்பாக், ஜாலான் ஆயர் ஜெர்னேயில்  பிடிபட்டனர் என்று   அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது  ஃபாரூக் எஷாக் கூறினார்.

முதல் சந்தேகநபர் ஷாபு போதைப் பொருளை பயன்படுத்தியிருந்ததோடு ஏழு போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளையும் கொண்டிருந்தது  விசாரணையில் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். மற்ற இருவருக்கும் குற்றவியல் பதிவுகளோடு போதைப் பழக்கமோ இல்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்ததாக நம்பப்படும் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் ஒரு லாரியை தாங்கள் பறிமுதல் செய்ததாக முகமது ஃபாரூக் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 379 வது பிரிவின் கீழ் இந்த சம்பவம்  விசாரிக்கப்பட்டு வருகிறது.  விசாரணைக்காக 24 முதல் 34 வயதுக்குட்பட்ட அந்த ஆடவர்கள் அனைவரும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :