ECONOMYMEDIA STATEMENTPress Statements

கிள்ளான், தாமான் மஸ்னாவில் வெ. 12 லட்சம் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள்- குணராஜ் தகவல்

கிள்ளான், ஜன 29- இங்குள்ள ஜாலான் கம்போங் ஜாவா, தாமான் மஸ்னாவில் நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான மூன்று திட்டங்களை செந்தோசா சட்டமன்றத் தொகுதி கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளது.

சுமார் 12 லட்சம் வெள்ளி செலவில் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த மூன்று வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் 12 மாதங்களில் பூர்த்தியாகும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள பழைய வெள்ள நீர் சேகரிப்பு குளத்தின் நீர் இறைப்பு பம்ப்களை சரி செய்து  தரம் உயர்த்துவது, ஜாலான் செங்கோட் பின்புறம் உள்ள கால்வாயை தற்காலிக வெள்ள நீர் சேகரிப்பு குளமாக மாற்றுவது மற்றும் நீர் சேகரிப்பு குளம் அமைப்பது ஆகிய அந்த மூன்று திட்டங்களின் வாயிலாக அங்கு நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் கிள்ளான்  நகராண்மைக் கழக அதிகாரிகள், குத்தகையாளர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களான மகேந்திரன் மற்றும் தங்கராஜூ ஆகியோருடன் தாம் அண்மையில் ஆய்வினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் பழைய குடியிருப்பு பகுதியான தாமான் மஸ்னா அடிக்கடி வெள்ளப் பிரச்னையை எதிர்நோக்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மூன்று முறை இங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதன் தொடர்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் மானியத்தில் இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சிலாங்கூர் இன்று பத்திரிகையிடம் கூறினார்.


Pengarang :