ECONOMYMEDIA STATEMENTNATIONALPress Statements

வேஸ்“ மூலம் தகவல் பரிமாறுவதால் அமலாக்க நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு- போலீசார் வருத்தம்

கோலாலம்பூர், ஜன 29- போலீசார்  மேற்கொள்ளும் சாலைத் தடுப்பு சோதனைகள் தொடர்பான தகவல்களை வேஸ் செயலி மூலம் பகிரும் நடவடிக்கைளை நிறுத்திக் கொள்ளும்படி பொது மக்களை கோலாலம்பூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்களின் இந்த நடவடிக்கை மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாலைக் குற்றங்களைப் புரிவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில் இடையூறை ஏற்படுத்தும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

சாலைத் தடுப்புச் சோதனைகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதால் மது போதையில் கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவது, சமிக்ஞை விளக்குகளை மீறிச் செல்வது மற்றும் எதிர்த்தடத்தில் பயணிப்பது போன்ற குற்றங்களைப் புரிவோர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கும் போலீசாரின் முயற்சிக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அலட்சியப் போக்குடனும் சாலை விதிகளை மதிக்காமலும் வாகனங்களைச் செலுத்துவோரால் ஏற்படும்  விபத்துகளால் பாதிக்கப்படுவோர் அனுபவிக்கும் வேதனைகளையும் துயரங்களையும் அந்த கொடுமையை அனுபவித்திராதவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பிலை என்றும் அவர் சொன்னார்.

ஆகவே, சாலைக் குற்றங்களைப் புரிவோருக்கு உதவுவதை விடுத்து அத்தகைய குற்றங்களைப் புரிவோர் மீது நடவடிக்கை எடுத்து வரும் காவல் துறைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருவார்கள் எனத் தாம் பெரிதும் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள தாமான் ஸ்ரீ மூர்னி, வோண்டர்லோண்ட் பர்க்கில் நேற்று நடைபெற்ற “ஹை புரோபைல் போலிசிங்“ எனும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைச் சொன்னார்.


Pengarang :