ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகள் விவகாரத்திற்கு தீர்வு காணும் வழிமுறை ஆராயப்படும் டத்தோ ரமணன்!

சுங்கை பூலோ, ஏப்.9-  சுபாங், கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகளில் வசித்து வருகின்ற 30க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களின் குடியிருப்பு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான  வழி முறை ஆராயப்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

அவ்வீடமைப்புப் பகுதிக்கு நேற்று  திடீர் விஜயம் புரிந்த அவர், சிதிலமடைந்திருக்கும் பலகை வீடுகளில் பாம்பு தொல்லைகளுக்கு மத்தியில் அம் மக்கள் வாழ்ந்து வருகின்ற இக்கட்டான சூழ்நிலையை நேரடியாக கண்டறிந்தார்..

கடந்த வாரம் அப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்  பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியை சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்வதற்கு டத்தோ ரமணனின் சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையம், உதவிக்கரம் புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் போது  அரசு கேந்திரத்தின் துணையோடு அப்பகுதியில் கூட்டுத் துப்புரவுப் பணி மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்ட அவர்,  தூய்மையைப் பேணிக் காக்கும் வகையில், வீடமைப்புப் பகுதியில் பெரிய குப்பைத் தொட்டி ஒன்று அமைக்கப்படும் என்றும் சொன்னார்..

மேலும், பழுதடைந்திருக்கும்  மற்றும்  கரையானால் அரிக்கப் பட்டிருக்கும் வீடுகளைப் புதுப்பிக்கும் பணிகள் குறித்தும், குடியிருப்பாளர்களுக்கான மண்டபத்தை சீரமைக்கும் வேலைப்பாடுகள் குறித்து முழு ஆய்வு மேற்கொள்ள குத்தகையாளரை பணித்தார். ஒரு மேம்பாட்டு நிறுவனமான நில உரிமையாளருக்கும் இக்கிராமத்து மக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற வீட்டுமனைப் போராட்டம் குறித்த தற்காலிக நிலவரத்தையும் கேட்டறிந்த டத்தோ ரமணன், நிரந்தரத் தீர்வுக்கு உரிய வழிமுறைகள் ஆராயப்படும் என்றார்.

இதற்கு இடையில், குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு அவசரத் தீர்வு காணப்படும் என்று டத்தோ ரமணன் அறிவித்தார். சுமார் ஒரு  மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, குடியிருப்பாளர் சங்கத்தின் செயலாளர் பத்மநாதனும் அவர்தம் குழுவினர் உடனிருந்து, தங்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் டத்தோ ரமணனிடம் தெரிவித்தனர்.


Pengarang :