MEDIA STATEMENTPBT

ஸ்ரீ செர்டாங் தொகுதியில் வெ.10 லட்சம் செலவில் மக்கள் நலத் திட்டங்கள்- டாக்டர் சித்தி மரியா தகவல்

சுபாங் ஜெயா, மே 5- ஸ்ரீ செர்டாங் தொகுதியிலுள்ள மக்களுக்கு சமூக நல மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த ஐந்தாண்டுத் தவணை காலத்தில் பத்து லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிடப் பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதி மக்கள் குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு தாம் இயன்ற வரை உதவிகளை வழங்கி வந்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மாநில அரசின் திட்டங்கள் மட்டுமின்றி  கல்வி உள்ளிட்ட நோக்கங்களுக்காக தொகுதி சார்பில்  கூடுதலாக பல திட்டங்களை தாங்கள் அமல்படுத்திய தாகவும் அவர் தெரிவித்தார். உயர்கல்விக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு தொகுதி சார்பில் வெ.500 வழங்குவதும் அத் திட்டங்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,000 ரிங்கிட் வழங்கும் திட்டத்தையும் அமல் படுத்தியுள்ளோம். மேலும் கிராமத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர் மூலம் மேலும் பல்வேறு வகையான உதவிகளை மக்களுக்கு நல்கி வருகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள பூச்சோங் பிரிமா வர்த்தக சதுக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ செர்டாங் தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பின் யீ மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய சித்தி மரியா, மாநில மக்களின் நலனுக்காக இல்திஸாம் சிலாங்கூர்  பென்யாயாங் திட்டத்தின் கீழ் 46 சமூக நலத் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது எனக் குறிப்பிட்டார்


Pengarang :