ECONOMYMEDIA STATEMENT

காணாமல் போன மூன்று கப்பல் பணியாளர்களைத் தேடுவதில் இந்தோ. உதவியை ஏ.பி.எம்.எம். நாடியது

ஜோகூர் பாரு, மே 5-  மலேசிய கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமையன்று எம்.டி. பாப்லோ எனும் கப்பல் தீப்பற்றிய போது காணாமல் போன மூன்று பணியாளர்களைத் தேடும் பணியில் இந்தோனோசியாவின் தேடி மீட்கும் அமைப்பின் உதவியை மலேசிய கடல்சார் அமலாக்கம் நிறுவனம் (ஏ.பி.எம்.எம்.) நாடியுள்ளது.

அந்த மூவரும் இந்தோனேசியாவின் தஞ்சோங் பினாங் கடல் பகுதிக்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் ஜோகூர் மாநில இயக்குனர் முதலாம் அட்மிரல் நுருள் ஹிஷாம் ஜக்காரியா கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கையில் இந்தோனேசியாவின் உதவியை நாடும்படி புத்ராஜெயாவிலுள தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் ஜோகூர் பாரு கடல் மீட்பு துணை மையத் தரப்பினர்  கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

தீ விபத்துக்குள்ளான அந்த கப்பலின் உள்ளே தேடுதல் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் ஹெஸ்மாட் எனப்படும் அபாயகரப் பொருள் மேலாண்மை சிறப்புக் குழுவினரும் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு அந்த கப்பல் பாதுகாப்பானதாக இல்லை என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அந்தக் கப்பலில் நீரை பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் அரச மலேசிய கடற்படை மற்றும் மலேசிய கடல் துறை கப்பல்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த சத்தியம் திரிபாதி (வயது 26) டினேஷ் குமார் சவுஹான் (வயது 34) மற்றும் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த சாபிட் சென்டேரோவெஸ்கி (வயது 37) ஆகிய மூவரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது


Pengarang :