ECONOMYSELANGOR

“சித்தம்“ ஏற்பாட்டில் உணவு கையாளுதல் மற்றும் டைபாய்டு தடுப்பூசி தொடர்பான பயிற்சி

ஷா ஆலம், மே 6- உணவு விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தகர்களில் பலர் உணவு கையாளும் வழி முறை மற்றும் டைபாய்டு தடுப்பூசி பெறுவதன் அவசியம் தெரியாத காரணத்தால் அமலாக்கத் துறையின் நடவடிக்கைளுக்கு அடிக்கடி ஆளாகி வருகின்றனர்.

இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வர்த்தகம் புரிவதை உறுதி செய்யும் நோக்கில் சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் 2023ஆம் ஆண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தவுள்ளது.

இந்த பயிற்சி வரும் மே மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஷா ஆலம் அரசு தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் நடத்தப்படும் என்று சித்தம் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் கூறினார்.

உணவுகளை கையாளும் வழி முறை மற்றும்  டைப்பாய்டு தடுப்பூசி பெறுவரை  இலக்காகக் கொண்ட இந்த பிரத்தியேகப் பயிற்சி இந்திய தொழில் முனைவோருக்காக இலவசமாக நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சித் திட்டத்தில் ஐம்பது பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறிய அவர், குறைந்த வருமானம் பெறும்  பி40 தரப்பினருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். 

இந்த பயிற்சியில் கலந்து கொள்வோர்  டைபாய்டு தடுப்பூசியை அங்கேயே பெறுவதற்குரிய வாய்ப்பினையும் பெறுவர் என்பதோடு அவர்களுக்கு டைபாய்டு கார்டும் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட சிலாங்கூர்வாசிகளாகவும் இம்மாநில வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பவர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கப்படும். இந்த பயிற்சி தொடர்பான மேல் விபரங்களுக்கு 016-6082454 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :