MEDIA STATEMENTNATIONAL

குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க தீயணைப்பு குழாயை எதிர்க்கட்சி எம்.பி. பயன்படுத்திய விவகாரம்- அமைச்சு விசாரணை 

ஈப்போ, மே 7- கிளந்தான் மாநிலத்தில் வட்டார மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண தீயணைப்புக் குழாயை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறை அமைச்சு விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.

எந்த தனி மனிதரும் செய்யக்கூடாத பொறுப்பற்ற செயலாக இது விளங்குவதால் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

தீச்சம்பவங்களை அணைப்பதற்கு மட்டுமே தீயணைப்புக் குழாய்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர பொதுமக்களின் அன்றாட தேவைக்கு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் தீயணைப்பு குழாய் நீரைப் பயன்படுத்தத் தொடங்கினால்  தீச்சம்பவம் ஏற்படும் போது நிலைமை என்னவாகும்? இது போன்ற சம்பவங்கள் அறவே நிகழக்கூடாது என அவர் சொன்னார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற தீயணைப்புத் துறையினருடன் ஓட்டப்பந்தயம் எனும் நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பட்டுள்ள நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை சமாளிக்கும் விதமாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி ஜலிஹா முகமது யூசுப் தீயணைப்பு குழாய் நீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த தாக வெளிவந்த தகவல் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இச்செயலுக்கு வலைத்தளவாசிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.


Pengarang :