EVENTMEDIA STATEMENT

கால்பந்து பயிற்றுநர் சத்தியநாதன் மறைவுக்கு பேரரசர் தம்பதியர் அனுதாபம்

கோலாலம்பூர், ஜூலை 19- தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் பி. சத்தியநாதனின் மறைவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா தனது அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் அன்னாரின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

சத்தியநாதனின் மறைவை அறிந்து தாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைவதாகவும் அன்னாரின் மறைவினால் ஏற்பட்டத் துயரிலிருந்து அவரின் குடும்பத்தினர் மீண்டு வர தாங்கள் பிரார்த்திப்பதாகவும் இஸ்தானா நெகாரா வின் அரச பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அனுதாபச் செய்திகள் அவர்கள் கூறினர்.

நாட்டிற்கு சத்தியநாதன் ஆற்றிய சேவை மற்றும் அர்ப்பணிப்பை தாம் போற்றுவதாக கூறிய பேரரசர், அன்னாரின் மறைவு நாட்டின் கால்பந்து துறைக்கு பேரிழப்பாகும் என்றார்.

தேசிய கால்பந்து குழுவின் பயிற்றுநர் பொறுப்பை சத்தியநாதன் கடந்த 2007 முதல் 2009 வரை வகித்து வந்தார்.

கடந்த 2006 முதல் 2008 வரை 23 வயதுக்கும் கீழ்ப் பட்டவர்களுக்கான அணியின் பயிற்றுநராக அவர் இருந்தபோது 2008இல் மெர்டேக்கா கால்பந்து போட்டியின் வெற்றியாளராகவும்  2008 இல் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும் அக்குழு தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபத்தைந்து வயதான சத்தியநாதன் புற்றுநோய் காரணமாக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் காலமானார்.


Pengarang :