EVENTMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் தேர்தல்-4 தொகுதிகளின் முடிவை ரத்து செய்யக் கோரும் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும்

கோல லங்காட், செப் 2 – கடந்த மாதம் நடந்த 15 வது சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வென்ற நான்கு இடங்களின் முடிவுகளை ரத்து செய்யக் கோரும் தேர்தல் மனுக்கள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவை (மனுக்கள்) தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. நாங்கள் முதலில் பிகேஆர் சார்பாக அவற்றைப் பற்றி விவாதித்தோம். மேலும் அனைத்து விஷயங்களையும் சரி பார்த்தோம்.

இறைவன் அருளால் அவை விரைவில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடிவுகள் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதற்காக  இதுவரை நாங்கள் காத்திருந்தோம் என்று அவர்  சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர்  மாநில அளவிலான 2023 ஃபிட் மலேசியா திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சரிபார்க்கப்பட்ட பின்னர்   தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்குப்பதிவு அறிக்கைகள் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.

 வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்த சுங்கை கண்டிஸ், தாமான் மேடான், கோம்பாக் செத்தியா மற்றும் டெங்கில்  தொகுதிகளின் முடிவுகள் ரத்து செய்யக் கோரி தேர்தல் மனுக்களை தாக்கல் செய்வது குறித்து பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்  ஆகிய கட்சிகள்  பரிசீலித்து வருகிறது.

 டிங்கிள் தொகுதியில் 407 வாக்குகள் வித்தியாசத்தில்  சுங்கை கண்டிஸ் தொகுதியில் 167 வாக்கு வித்தியாசத்திலும் கோம்பாக் செத்தியாவில் 58 வாக்குகள் வேறுபாட்டில்  தாமான் மேடான் தொகுதியில் 30 வாக்குகளிலும் பக்கத்தான்-பாரிசான் கூட்டணி தோல்வி கண்டது.


Pengarang :