ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வனவிலங்குகள் தொடர்பான குற்றங்கள் இவ்வாண்டு 6.79 விழுக்காடு குறைந்தன

ஈப்போ, அக் 8- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வனவிலங்குகள் தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 6.76 விழுக்காடு குறைந்துள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டுப பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹஸானி கசாலி கூறினார்.

வன விலங்கு குற்றங்களுக்கு எதிராக இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட  கசானா ஒருங்கிணைந்து நடவடிக்கையில் 192 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 206 சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்று அவர் தெரிவித்தார்.

இக்குற்றங்கள் தொடர்பில் இவ்வாண்டு 175 பேர் கைது செய்யப்பட்டதாகக்  கூறிய அவர், கடந்தாண்டில் பதிவான 243 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 27.98 விழுக்காடு குறைவாகும் என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கசானா ஒருங்கிணைந்த நடவடிக்கை சட்டவிரோத வனவிலங்கு விற்பனை, மற்றும் வேட்டையை முறியடிப்பதில் உரிய பலனைத் தந்துள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

வனவிலங்க நடவடிக்கை தொடர்பில் அரச மலேசிய சுங்கத் துறை, தீபகற்ப மலேசியா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டில் இதுவரை நான்கு கோடி வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு பொருள்கள் கைப்பற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்தாண்டில் இதன் மதிப்பு 8 கோடியே 59 லட்சம் வெள்ளியாக இருந்தது என்றார்.

இந்த சோதனை நடவடிக்கைகள் ஆக்ககரமான பலனைத் தந்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், நாட்டிலுள்ள வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதில் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :